வாகனம் மோதி 12 பசுக்கள் உயிரிழப்பு: ஸ்ரீபெரும்புதூரில் நேர்ந்த பரிதாபம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 12 பசுக்கள் உயிரிழந்துள்ளன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை யாரும் கடைப்பிடிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளின் உரிமையாளர்கள், இவற்றை முறைப்படி பட்டிகளில் அடைத்துவைத்து பாதுகாப்பாக வளர்ப்பதில்லை. முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஒரகடம் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 12 பசுக்கள் உயிரிழந்தன. பின்னர் காலையில் பசுக்களின் உரிமையாளர்கள் வந்து இறந்த பசுக்களின் உடல்களை அப்புறப்படுத்தினர். முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

ஏற்கெனவே, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாவட்டமாக உள்ளது. இதை ஆய்வு செய்தபோது விபத்துகளில் ஒரு பகுதி நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படுவதாகத் தெரியவந்தது. கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளைச் சுற்றித்திரிய விடக்கூடாது என வலியுறுத்தியும், இதைக் கடைப்பிடிக்க முன்வருவதாகத் தெரியவில்லை. சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் கால்நடைகளைச் சாலைகளில் விட்டால் அவை பிடிக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்படும். மேலும் கால்நடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை யாரும் பின்பற்றவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *