விஜய் பேச்சு காப்பியடிக்கப்பட்டதா? சமூக வலைதளத்தில் தொடர்ந்த கிண்டல்,பட்டிமன்றப் பேச்சாளர் விளக்கம்

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு காப்பியடிக்கப்பட்டதாக எழுந்த கிண்டல்களுக்கு பட்டிமன்றப் பேச்சாளர் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய கருத்துகளுக்கு அரசியல்வாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் போது, சமூக வலைதளத்தில் பலரும் விஜய் பேசியதைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். ஏனென்றால், விஜய் தன்னுடைய பேச்சில் “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். பயந்துவிடாதீர்கள். இது திருக்குறள் தான். பூக்கடையில் ஒருத்தன் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறான். திடீரென்று அவனுக்கு அங்கு வேலை போய்விட்டது.

அவன் தெரிந்தவன் என்பதால், அவனை பட்டாசுக் கடையில் வேலைக்கு உட்கார வைத்துவிடுகிறார்கள். ஒரு வெடி கூட விற்கவில்லை. என்னடா என்று பார்த்தால், 10 நிமிடத்துக்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் பிடித்து பட்டாசு மீது தெளித்துக் கொண்டிருந்தான். அது தொழில் பக்தி. அவனை விட்டுப் போகவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதே கதை மற்றும் திருக்குறளை பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹரும் பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோவையும், விஜய் பேசிய வீடியோவையும் சேர்த்து கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். பேச்சைக் கூட காப்பியடித்தா பேசுவது என்று பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “ஒரு விழாவில் நான் பேசி வைரலாகும் வீடியோவில் இரண்டு விஷயங்கள் வருகின்றன. ஒன்று திருக்குறள். அதை திருவள்ளுவர் எழுதினார். நான் எழுதவில்லை. இன்னொன்று நான் சொன்ன குட்டிக் கதை. அதுவும் என்னுடைய சொந்தக் கதை கிடையாது.

பல வருடங்களாகப் பல பட்டிமன்ற மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்படுகிற குட்டிக் கதை தான் அது. அந்தச் சூழலுக்கு ஏற்றார் போல் திருக்குறளையும், கதைகளையும் சொல்வோம். அப்போது தான் அது மக்களிடையே போய் சேரும். அதுமாதிரி ஆரணியில் வியாபாரிகள் அமைப்பு சார்ந்த நிகழ்ச்சி என்பதால், அந்த இடத்தில் பேசினேன்.

விஜய் சாரும் வேறு எங்கேயாவது இந்தக் கதையைக் கேட்டிருக்கலாம். அது பரவலாகச் சொல்லப்படுகிற கதை தான். ஆகையால் பேசியிருக்கலாம். புத்தகங்களில் வாசித்துக் கூடப் பேசியிருக்கலாம். ஒரு சேர அமைந்தது தற்செயலான நிகழ்வு தான் என்று நம்புகிறேன்.

நான் அவரது தீவிரமான ரசிகை. தற்செயலாக அமைந்ததில் மகிழ்ச்சி. நான் கூட என் பேச்சில் திருக்குறளை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்பேன். விஜய் சார் அதை ரொம்பவே சிறப்பாகச் சொல்லியிருப்பார். அதற்கான விளக்கத்தைக் கூட நிறுத்தி நிதானமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருந்தார். இதற்கு முன்பு அவருடைய நடிப்புக்கு ரசிகையாக இருந்தேன். ‘பிகில்’ பேச்சுக்குப் பிறகு அவருடைய பேச்சுக்கும் ரசிகையாகி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கவிதா ஜவஹர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *