நுாற்றி இருபது ஆண்டு கால வரலாற்றில் அரபிக்கடலில் முதல் முறையாக இரண்டு புயல்கள் ஒரே நேரத்தில் சுழன்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவாகின. அக். 25ல் மஹாராஷ்டிராவின் ரத்னகிரிக்கு 350 கி.மீ. மேற்கில் முதல் புயல் உருவானது; அதற்கு ‘கியார்’ என பெயரிடப்பட்டது. இந்த அதி தீவிர புயல் அரபிக்கடலில் மேற்கு திசையில் சுழன்று நேற்றிரவு ஓமன் அருகே சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்த புயல் இன்று மேலும் வலுவிழக்கும் என தெரிகிறது.

அரபிக்கடலில் மற்றொரு புயலான மஹா உருவாகி சுழன்று வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வுகளின்படி120 ஆண்டுகளில் முதல் முறையாக அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகியுள்ளன. இது வானிலை மற்றும்கடலியல் விஞ்ஞானிகளை புதிய ஆய்வுக்கு துாண்டியுள்ளது.எந்த வகை தட்பவெப்ப நிலை மற்றும் காற்றின் அடிப்படையில் இரண்டு புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகின என புதிய ஆய்வுகளை துவக்கியுள்ளனர்.

நுாற்றி இருபது ஆண்டு கால வரலாற்றில் அரபிக்கடலில் முதல் முறையாக இரண்டு புயல்கள் ஒரே நேரத்தில் சுழன்று வருகின்றன. இதில் ‘மஹா’ என்ற இரண்டாவது புயல் கர்நாடகா வழியே அரபிக்கடலின் வடக்கு பகுதிக்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உள்ள ஆதாரங்களின்படி வங்கக்கடலில் மட்டுமே ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகியுள்ளன.ஆனால் அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகாது என விஞ்ஞானிகள் நினைத்திருந்த நிலையில் இரண்டு புயல்கள் உருவாகி விஞ்ஞானிகளுக்கு புதிய ஆராய்ச்சிக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் அரபிக்கடலில் தற்போது வலுவிழந்த நிலையில் உள்ள கியார் புயல் மிக அதிதீவிர புயலாக மாறி வலுவிழந்தது. 2007ம் ஆண்டில் அரபிக்கடலில் ‘கோனு’ என்ற புயல் சூப்பர் புயலாக உருவானது. அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து அரபிக்கடலில் சூப்பர் புயல் உருவாகியுள்ளது.சென்னை மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி:

மஹா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று லட்சத்தீவில் இருந்து25 கி.மீ. துாரத்தில் நேற்று காலையில் மையம் கொண்டிருந்தது. இது வடக்கு நோக்கி கர்நாடகா கடற்பகுதி வழியே அரபிக்கடலின் மைய பகுதிக்கு நகரும்.

இந்த புயலால் அரபிக்கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். கடலில் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு போன்ற இடங்களுக்கு இன்று செல்ல வேண்டாம்.நவ., ௪ம் தேதி வங்கக்கடலில் வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 4ம் தேதியில் இருந்து மத்திய வங்க கடல் பகுதிக்குள் மீனவர்கள் நுழைய வேண்டாம். ஏற்கனவே கடலுக்குள் சென்றவர்களும் திரும்பி விட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *