எட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ்: மருத்துவமனைகளில் இயல்பு நிலை திரும்பியது.

சென்னை: எட்டு நாட்களாக டாக்டர்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக டாக்டர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ம் ஆண்டு டாக்டர்களின் ஊதிய விகிதம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியது.

ஏற்கனவே பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமான டாக்டர்கள் நேற்றுமுன்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று டாக்டர்கள் தரப்பினர் சொல்லி வந்தனர். போராட்டத்தை கைவிட்டால், பேச்சுவார்த்தைக்கு தயார் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் 8ம் நாளாக நேற்றும் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வதாக நேற்று காலை 7.45 மணியளவில் டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பும் டாக்டர்களுக்கு முதல்வர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வரின் உத்தரவுப்படி, அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பிரேக் இன் சர்வீஸ் உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.

ஏற்கனவே உறுதியளித்தபடி, அரசு டாக்டர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும்’’ என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்கள் நீங்கலாக பிற டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று காலையில் சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசை சந்தித்தனர். போராட்டம் நடத்திய டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பணியிடமாற்றத்தை திரும்ப பெறுவது தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள் குழுவுடன் பேச வேண்டும். அதன்பின்னரே அதுதொடர்பான முடிவெடுக்க முடியும் என்றார். அதைத்தொடர்ந்து 4 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை டாக்டர்கள் கூட்டமைப்பினர் சுகாதாரத்துறை செயலாளரிடம் அளித்தனர். டாக்டர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல வேண்டும், ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டார்.

இதனால் நேற்று பிற்பகல் முதல் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிக்கு வந்ததால் இயல்புநிலை திரும்ப தொடங்கியது. இதுதொடர்பாக டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்துக்கு பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில், மீண்டும் போராட்டத்தை தொடர்வது குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம். இவ்வாறு டாக்டர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *