19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை கவரும் வகையில் புதுமையான பல்வேறு திட்டங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், சுரங்கப்பாதையில் உள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதியதாக 32 ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை வழங்குவதோடு, மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிப்படை வசதியையும் மேம்படுத்தி வருகிறோம்.

அதன்படி, ஆலந்தூர், கோயம்பேடு உட்பட 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வங்கிகள் மூலம் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அடுத்தபடியாக சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்பகுதிகளில் ஏடிஎம்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.

திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பா கல்லூரி, கீழ்பாக்கம், நேரு பூங்கா, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், எல்ஐசி, டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, அரசு விருந்தினர் மாளிகை, உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் மொத்தம் 32 ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 5 சதுர மீட்டர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் இறுதி செய்த பின்னர், அவர்களால் ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரங்கள் அமைக்கப்படும்’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *